நம்மாழ்வார் அய்யாவின் வாழ்கை வரலாறு
நம்மாழ்வார் ஐயாவின்
வாழ்க்கை வரலாறு
என்றென்றும் ஒவ்வொருவருக்குள்ளும், இயற்கையிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் இயற்கை வாழ்வியல் அறிஞர் திரு. கோ. நம்மாழ்வார் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாறு என்பது ” புழுதியிலும் புழுதியாய் வாழ்பவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களுக்கான இன்றைய உலகை கட்டமைக்க பெரிதும் உதவியாக இருக்கும் நம்பிக்கை வழிகாட்டி என்பதில் யாருக்கும் ஐயமில்லை.
ஐயா அவர்கள் தன்னுடைய 76 ஆண்டுகால வாழ்வில் பல்வேறுபட்ட பயணங்களை மேற்கொண்டவர். அந்த பயணங்களில் மக்களிடம் தான் கற்றுக் கொண்ட முழு வாழ்வியல் அனுபவங்களையும் தன் கடைசி மூச்சு இந்த உலகை விட்டு பிரியும் தருணம் வரையில் , சுய நலம் பாராமல் அந்த பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்குமே கொண்டு சேர்த்தவர்.
ஐயா அவர்களின் இந்த அயராத முயற்சியில் பொதுமக்களின் பங்களிப்பு என்பது மிக மிக உயர்வானது. ஆரம்பத்தில் ஐயாவின் செயல்பாடுகள் இயற்கை வழி விவசாயத்தை பொதுமக்களிடம் சேர்ப்பதில் தொடங்கியது. பின்னர் அது மட்டுமே மக்களுக்கான இழந்த சுயசார்பு வாழ்வியலை மீட்க உதவாது. எனவே அனைவரின் வாழ்வியலும் இயற்கை என்பது ஒன்றாக கலக்க வேண்டும் என முடிவெடித்து, ” இயற்கை வாழ்வியலையே “ பரப்புரை செய்தார்
ஐயா அவர்களின் ஞானம் எல்லா துறையிலும் பரந்து விரிந்தது. மேலும் ஐயா அனைத்து விஷயங்களையும் பார்க்கும் கோணம் மற்றும் அணுகும் திறன் முற்றிலும் வேறுபட்டது. இதை ஐயாவுடன் நெருங்கிப் பழகிய பல லட்சம் மக்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட பார்வை மற்றும் அணுகும் திறன் தான் இன்றைய காலகட்டத்துக்கு மிகத்தேவையானது. எனவே இதை ஆவணப்படுத்தும் பணியை ” வானகம் ஒருங்கிணைப்பாளர்கள் “ ஏற்கனவே மேற்கொண்டுள்ளனர். ஐயா வாழ்க்கைப் பயணம் நீளமானதாகையால் அனைத்து கருத்துக்களையும் ஆவணப்படுத்த வேண்டியுள்ளது.
நினைவுகளில் நம்மாழ்வார்!
இரா. பாரதிச்செல்வன், இதய நோய் சிறப்பு மருத்துவர், மன்னார்குடி:
படிப்பறிவற்ற, ஏழை எளிய மக்கள், விவசாயிகளின் வயிற்றி லடித்துப் பொருள் ஈட்டத் திட்டமிடும் பன்னாட்டு பெரு முதலாளிகள் மீதும், அவர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு உதவும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், விஞ்ஞானிகள் மீதும் நம்மாழ்வார் ஐயா கொண்டிருந்த கடுங்கோபத்தை மீத்தேன் எதிர்ப்புப் போராட்டத்தின் போது தெரிந்துகொண்டேன்
கார்ல் மார்க்சின் உபரி மதிப்பு கோட்பாட்டை அவர் விளக்கிய முறையையும், ஜான் பெர்கின்ஸனின் 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' என்ற நூலின் பகுதிகளை விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்லி, முதலாளித்துவ நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் வளர்ச்சி என்ற பெயரில் எப்படி ஏழை நாட்டு அரசியல்வாதிகளை அடிமைப்படுத்தி அந்நாடுகளைக் கொள்ளையடிக்கின்றன என்பதை விளக்குவார்.
படித்தவர்கள் புரிந்துகொள்ளச் சிரமப்படும் சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளை எளிய வார்த்தைகளில் பாமரர்களுக்கும் புரிய வைக்கும் அய்யாவின் பேச்சைக் கண்டு வியந்துபோனேன்.
மன்னார்குடி பகுதியில் மீத்தேன் துரப்பணத் திட்டத்துக்குத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்காமல் தடுத்து வைத்திருப்பதற்கு ஐயாவின் போராட்டங்கள் முக்கியக் காரணம். ஆனால், கெடுவாய்ப்பாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக் களத்திலேயே ஐயா உயிர் நீத்தார். களத்தில் ஒலித்த ஐயாவின் குரல் இப்போதும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
எனக்குள் நிகழ்ந்த மாற்றம்
சரோஜா, இயற்கை விவசாயி பள்ளபட்டி, கரூர் மாவட்டம்:
இயற்கை விவசாயம் செய்தாலே, வெளிநாட்டு கம்பெனிகளை எதிர்த்துப் போராடுகிறாய் என்றுதான் அர்த்தம். 'இதற்காக எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடு. ஆனால், எதற்காகவும் இதை விட்டுக் கொடுக்காதே' என்று பயிற்சியின் போது நம்மாழ்வார் உறுதிபடக் கூறுவார்.
'ஒரு நாள் விவசாயத்தில் யார் நமக்கு உதவுவார் என்று சிந்தித்துக்கொண்டு, நான் தனியாக என்ன செய்ய முடியும் ஐயா' என்று கேட்டேன். 'நீ தனியாக இல்லை. இயற்கை உனக்கு ஆதரவாக இருக்கிறது. தைரியமாக இறங்கு' என்றார். இன்றுவரை இயற்கையின் ஆதரவும் ஐயா கொடுத்த தைரியமுமே என்னை இயக்குகின்றன.
விதைக்கப்பட்ட செயல்பாட்டாளர்
எம்.ஏகாம்பரம், இயற்கை வேளாண் பயிற்றுநர், செஞ்சி:
2004-ல் ஆழிப் பேரலையின்போது கடல் நீர் உட்புகுந்து நிலங்கள் பாழ்பட்டுப் போயின. நிலங்களைச் சீர்திருத்த 6 முதல் 10 ஆண்டுகள் ஆகும் என்று வல்லுநர்கள் கூறிவிட்டனர். நம்மாழ்வார் ஐயா தலையிட்டு அவற்றைப் பழைய தன்மைக்கு விரைந்து மாற்ற முயற்சி எடுத்துச் செய்தும் காட்டினார்.
'மஞ்சத் துங்க்ரோ' என்ற வைரஸ் தாக்கி விளைநிலங்கள் சேதமானபோது வேளாண் துறை, கல்லூரி மாணவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர் அடங்கிய குழு ரசாயனப் பூச்சிக்கொல்லி பயன்படுத்தக் கூறி விவசாயிகளிடம் வலியுறுத்தினர். அதை மறுத்து, ஐயாவின் ஆலோசனைப்படி இஞ்சி, பூண்டு கரைசலை விவசாயிகள் தெளித்தார்கள். வைரஸ் நோய் சீக்கிரத்திலேயே கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதைப் பார்த்துச் சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. பேசி, அதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்தார். இது போன்று நம்மாழ்வார் ஐயா எடுத்த முயற்சிகளைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
நம்மாழ்வார் உரை – உழவுக்கும் உண்டு வரலாறு
சித்திரகாலி, வாலான் நெல், சிறைமீட்டான், மணல் வாரி, செஞ்சம்பா, கருஞ்சூரை, சீரகச்சம்பா, முத்துச்சம்பா, விளங்கி நெல், மலைமுண்டன், பொற்பாளை, நெடுமூக்கன், அரிகிராவிக் மூங்கிற்சம்பா, கத்தூரிச்சம்பா, வாணன்நெல், காடைக்கழுத்தன், இரங்கல் மீட்டான், கல்லுண்டை, பூம்பாளை, கடுக்கன் சம்பா, வெள்ளைச்சம்பா, புத்த நெல், கருங்குறுவை, புனுகுச்சம்பா – நெல்ரகங்கள்
குடைக்கொம்பன், செம்மறையன், குத்துக்குளம்பன், மேழை, குடைச்செவியன், குற்றாலன், கூடுகொம்பன், கருப்பன், மஞ்சள் வாலன், படைப்புப்புடுங்கி, கொட்டைப்பாக்கன், கருமறையன் பசுக்காத்தான், அணிற்காலன், படலைக்கொம்பன், விடத்தலைப்பூ நிறத்தான், வெள்ளைக்காளை – மாடுவகைகள்
முக்கூடற்பள்ளு
முக்கூடற்பள்ளுவில் காணப்படும் நெல் ரகங்கள், மாடு வகைகள் எல்லாம் நாம் அறியாத அளவுக்கு பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி போன்ற திட்டங்கள் நம் மரபுவழி இயற்கை வேளாண்மையைச் சீரழித்து விட்டது. நம் மரபு வழி வேளாண்மை குறித்து மதுரைப்புத்தகத்திருவிழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஆற்றிய உரைதான் கீழே உள்ளது.
“உள்ளத்தில் மாசு படியும்போது அதை அகற்றும் கருவியாக புத்தகங்கள் செயல்படுகிறது. திருவள்ளுவர் ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு’ என்கிறார். நமக்குள் இருக்கும் அறிவை வெளிக்கொணரும் கருவியாக புத்தகங்கள் உள்ளன.
மரம், மாடு, கன்று தனியாக இருந்தால் அதை யாராவது சேர்த்து கொள்கிறார்கள். ஆனால், மனிதனில் மட்டும் அநாதைகள் இருக்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்பே மாடுகட்டிப் போரடித்தால் நேரம் ஆகுமென்று யானை கட்டிப் போரடித்த மாமதுரை. உலகில் தோன்றிய முதன்மையான சமுதாயம் தமிழ்ச் சமுதாயம். ஐம்பது வருடமாக நிலத்தில் விஷத்தைப் போட்டுப் பயிரிடத் தொடங்கிவிட்டோம். முன்பு அவ்வைப் பாட்டி சொன்னாள் நெல்லுக்கு இரைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்குப் போகும்; அதைப் பசுமாடு உண்ணும். அந்தப் பாலைக் குடித்து வளர்ந்த குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தன. ஆனால், இப்பொழுது பிறக்கும் குழந்தைகளில் 50% கண்பார்வை குறைவுடனும், 75% இரத்தசோகையுடனும் 5% குறைந்த எடையுடனும் பிறக்கின்றன. இதற்கு காரணம் இயற்கை விவசாயம் அழிந்தது தான். உலகில் பாதிப்பேருக்கு உணவு பத்தவில்லை. 85 கோடி பேர் பசியோடு உணவு இன்றித் தவிக்கிறார்கள். ஐந்தில் ஒரு இந்தியன் பசியோடு இருக்கிறான். இதைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல்தான் இந்த சுகபோக வாழ்வை அனுபவித்து வருகிறோம்.
நமது பண்பாட்டை மறந்து நாகரீகம் என்று நாய் போல அலைகிறோம். 1905இல் இந்தியா வந்த ஆல்பர்ட் ஒவார்ட் என்ற ஆங்கிலேயர் இந்திய விவசாயத்தைப் பார்த்து வியந்து இனி இவர்கள்தான் என் ஆசிரியர்கள் என்றார். அவர் 1941இல் இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழக புத்தகத்தில் நம் விவசாய முறையே சிறந்தது என்கிறார். ஆனால், நாம் அதைப் படிக்கவில்லை. வெளிநாடுகளில் இருந்து வாங்கிப் பொழைக்கும் பிச்சைக்காரர்களாகவே நம் வாழ்க்கை மாறி வருகிறது. உலகின் மிக முக்கிய பிரச்சனை – பூமி சூடாகிறது. இரண்டாவது உணவுப் பற்றாக்குறை.
முதலில் நமக்கு டீசலைக் கொடுத்தான். எதுக்குன்னா “டிராக்டர்ல ஊத்து; மோட்டார் போட்டு தண்ணி எடு; தானியம் பெருகும்”னு சொன்னான். இப்ப தானியத்தைக் கொடுன்னு நம்மட்ட கேட்கிறான். எதுக்குன்னா டீசல் தயார் பண்ணவாம். இதுக்கா உழைக்கிறோம்? வெளிநாட்டுப் பொருளை நம்பி மேலும் அந்த கருவிகளை கொண்டு நிலத்தையே கெட்டியாக்கிட்டோம். சோளம், கம்பு, தினை போன்ற தானியங்களை பயிர் செய்து சாப்பிட்டு நன்றாக இருந்தோம். ஆனால், இன்று விளையும் மக்காச்சோளம் பாதி கோழிக்கும், பன்னிக்கும், மாட்டுக்கும் தீவனமா போகுது. நாம கோழியத் தின்னா சத்துன்னு நினைக்கிறோம். எதை எதையோ நாம ஆசைப்பட ஆரம்பிச்சுட்டோம். அமெரிக்கா போக ஆசை, நிலாவுக்கு போக ஆசைன்னு தேவையில்லாத ஆசை அதிகமாயிடுச்சு.
ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். நாம என்ன செஞ்சோம்? நல்லா வேடிக்கை பார்க்கிறோம். அரிசி, வெண்டிக்கா, கத்திரிக்கா எல்லாமே விஷமா மாறிட்டு வருது. திராட்சை எல்லாம் உரப்பொடி கலவைல பதினைந்து தடவையாவது ஸ்பிரே பண்றாங்க. நாம அரை கிலோ பத்து ரூபான்னு வாங்கி திங்கிறோம். பேருந்து நிலையத்துல இறங்குனா ஒரு சாப்பாட்டுக் கடை, மருந்துக் கடை, வட்டிக்கடை(பேங்க்) இருக்கும். எல்லாத்தையும் அனுபவிக்கிறோம். தண்ணி முன்னூறு அடிக்கு கீழ போயிருச்சு. அதையும் விஷமாக்கிட்டோம். முன்னால அரசர், அரசி, மக்கள் இடுப்புல இருந்து முழங்கால் வரை உடை போட்டார்கள். மேலே நகைகள் அல்லது மாலைகள் அணிந்து இருந்தார்கள். ரோமாபுரி யவனர்கள் உடம்பு முழுவதும் மூடி உடை அணிந்து இருப்பார்கள். இவர்கள் இங்கு காவல் புரிந்து வந்தனர். இப்ப எல்லாமே தலைகீழ். காவல்காரன் போட்டத நாம போட்டது மட்டுமில்லாம சாயம் போட்டு போட்டு கழிவு நீரெல்லாம் ஓடி காவிரி, பவானி, நொய்யல் எல்லாம் சாக்கடையா ஓடுது. வைகையில எல்லாம் கைய வைக்க முடியாது. அப்படி நீர்நிலையையெல்லாம் சாக்கடையா ஆக்கிட்டோம்.
சூழல் அறிவு இல்லை. உயிர் சூழலியல் (ECOLOGY). இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நல்ல சூழல் இருந்தது. திணைகளை உண்ண பறவைகளும், பறவைகளை பத்த காவலும் என இயற்கையாய் இருந்தது. இன்று உணவுக்குக் கையேந்த வேண்டி வந்துவிட்டது. பருத்தி 5-10% வரை போடுறோம். நூல் போக கொட்டைகளை மாட்டுக்கு போடுறோம். உரத்த போடாம பூச்சிக்கொல்லின்னு இங்கிலீஸ் விஷமா போட்டு ஏரி, புல் என எல்லாம் விஷமா மாறிடுது. கடைசில தாய்ப்பாலும் விஷமாயிடுச்சு. தரங்கெட்ட, ஈனமான இனமாக தமிழினம் மாறி வருகிறது.
முன்னாடி தட்டான் கொசுவைத் தின்று விடும். சிலந்தி அந்தைத் தின்றுவிடும். நாம போட்ட விஷத்தால எதிரிகள் சாவதற்கு பதிலா நண்பர்கள் செத்துப் போறாங்க. நாம உடம்பு சீக்காகி டாக்டர்ட்ட போய் அவர் குடும்ப டாக்டராகிவிடுகிறார். மருந்துகடைக்காரங்க சொந்தமாகிவிடுறாங்க. ஐ.நா சபைல உணவுப்பஞ்சத்தப் போக்க வழிகேட்டா நாலு ஆண்டு ஆராய்ச்சி பண்ணி தவளை மரபணுவ தக்காளில வைக்கிறானாம். உடையாதாம். இப்படி பல வித்தைகளை சொல்றாங்க. முக்கூடற்பள்ளுல பல விதை ரகங்கள சொல்றாங்க. இதுல சாப்பிட்ட நீராகாரம் நம்மவர்களின் உடலை வலு செய்தது. இப்ப ஐ.ஆர்.8,20,60 என நம்பர் போடுறான். மூணு வருசங்கூட தாக்குப்புடிக்க முடியல அந்த விதையால. மூன்றாம் உலகப்போர் 1960லயே வந்துருச்சு. அதுக்குப் பேரு பசுமைப் புரட்சி. ஆறு அறிவு இருக்க நாம உலகத்த அழிக்கிறோம். ஒரு அறிவு உள்ள மரம் தன் பழங்களை பறவைகள் உண்ணத் தருகிறது. அதன் எச்சம் மூலம் தன் இனத்தை வளர்க்கிறது. நாம இயற்கையை விட்டு விலகி எவ்வளவோ தூரம் வந்துட்டோம். இனியாவது இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்வோம். வீட்டுக்கு அருகில் மரங்களை பாருங்கள். பறவைகளைப் பாருங்கள். நல்ல புத்தகங்களைத் தேடி படியுங்கள்.”
புத்தகத்திருவிழாவில் நம்மாழ்வார் அய்யாவின் உரையை கேட்டு அவர் எழுதிய ‘உழவுக்கும் உண்டு வரலாறு’ என்னும் புத்தகம் வாங்கினேன். பசுமை விகடனில் நம்மாழ்வார் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நல்லதொரு நூலாக விகடன் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. 45 ரூபாய்.
ஜப்பானில் உதித்த விவசாய சூரியன் மசானோபு ஃபுகோக்கா போன்ற விவசாய ஆராய்ச்சியாளர்களிலிருந்து ராச்சேல் கார்சன், பில்மொல்லிசன், பாஸ்கர்சாவோ, கிளாடு பூரிங்கன், தபோல்கார், அமெரிக்கர் ரொடேல், கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ என நாம் அறியாமல் இருக்கும் பல இயற்கை விவசாய ஆராய்ச்சியாளர்கள், தலைவர்கள் குறித்து இந்நூலில் கூறுகிறார். ‘எந்தப் பலனையும் எதிர்பராது குஞ்சுக்கு உணவூட்டும் பறவை போன்று தாயன்புடன் செயல்படும் தொண்டர்களே’ என்று கூறி வழிகாட்டியாய் வாழ்ந்த ஜே.சி.குமரப்பா, ஈரோட்டில் ஒற்றை நாற்றுச் சாகுபடியை முப்பது ஆயிரம் ஏக்கர் அளவில் ஊக்குவித்துள்ள மாவட்ட ஆட்சியர் உதயசந்திரன் போன்றவர்களோடு வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களே வியந்து போற்றிய நம் உழவர்களைக் குறித்து எழுதியிருக்கிறார். நரம்புத்தளர்ச்சி, மூச்சுத்திணறல், சிறுநீரகத்தில் கல்அடைப்பு, புற்றுநோய் போன்ற வியாதிகளுக்கும் பூச்சிக்கொல்லிகளில் உள்ள நஞ்சிற்கும் பங்குண்டு என்பதையும் கூறுகிறார். இயற்கை விவசாயத்திற்கு மண்புழுக்களிலிருந்து கால்நடைகள் வரை எப்படி உதவுகின்றது என்பதையும் அதனால் நமக்குக் கிடைக்கும் பயன்களையும் பட்டியலிட்டிருக்கிறார். உலகமயமாக்கலுக்கும், உலகவெப்பமயமாவதற்கும் உள்ள தொடர்பை விவரிக்கிறார்.
மக்களால் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் தலைவர்கள் மக்களின் நலனுக்காக உலகையே இரட்சிக்க பிறந்த அமெரிக்காவிலிருந்து விவசாயம் குறித்த சிந்தனைகளையும், இயந்திரங்களையும், இரசாயனங்களையும் கடனாய்ப் பெற்று மக்களின் பசிப்பணி போக்க பசுமைப்புரட்சி திட்டங்களை தீட்டி நம் மண்ணை மலடாக்கி, உணவை நஞ்சாக்கி மேலும், விவசாயிகளை கடனாளிக்கிய கதையைத்தான் இந்நூல் சுட்டிக்காட்டி நம் சொரணையைக் கொஞ்சம் உறைக்க வைக்கிறது. நெல் நட்ட இடங்களில் எல்லாம் கல் நட்டு விளை நிலங்களை எல்லாம் விலை நிலங்களாக்கி இனி உணவுக்காக வருங்காலத்தில் மற்ற நாடுகளை நோக்கி நாம் பிச்சையெடுக்கப் போவதைத்தான் சுட்டிக்காட்டுகிறது. லட்சக்கணக்கில் விவசாயிகள் கொத்துக்கொத்தாய் மடிந்தபோதும் மானாட மயிலாட, கிரிக்கெட்டு பார்த்து தறிகெட்டு கிடக்கும் நம் மனிதத்தை கேள்விக்குட்படுத்துகிறது. மேலும், புரட்சியெல்லாம் மக்கள் செய்ய வேண்டும் அரசு செய்தால் புரட்டாசி மாசம் சுண்டல் வாங்கக்கூடப் பயன்படாது என்பதை நம்மை உணரச்செய்யும் புத்தகம்.
நமக்கு நம்பிக்கை தரும் விசயம் என்னவென்றால் ‘உன்னால் முடியும் தம்பி’ கமல்ஹாசன் போல நிறைய பேர் தனியாக தீவிரமாக இயற்கை விவசாயம், மரம்வளர்ப்பு போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருவதுதான் நம்மை சுதந்திரமாக மூச்சு விடச்செய்கிறது.
நம்மாழ்வார் மறைவு
நம்மாழ்வாரின் மறைவு நிச்சயமாக nammalvarஅனைவருக்கும் ஒரு பேரதிர்ச்சி. இயற்கை விவசாயத்தை இன்றைய தலைமுறைக்கு கொண்டு சென்ற பெரும் ஆளுமை அவர். இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அடிப்படை மானுட வாழ்வாதார உரிமைகள் என அடிப்படைகளை இணைக்கும் பார்வையை அவர் தன் பொது வாழ்க்கை முழுவதும் முன்வைத்து வந்தார். தமிழுணர்வாளர்கள், சுதேசி அமைப்பினர் என அனைவருக்கும் அவரது பங்களிப்பும் பார்வையும் முக்கியமானவையாக இருந்தன. இயற்கை வேளாண்மை குறித்தும் நம் வாழ்க்கை முறை குறித்தும் அவரது பேச்சு மிகவும் இயல்பானதாகவும் கருத்து செறிவு கொண்டதாகவும் அமைந்திருக்கும். இன்று இயற்கை வேளாண்மை அனைவராலும் பார்க்கப்படும் பேசப்படும் விவாதப் பொருளாக தமிழகத்தில் மாறியிருப்பதில் நம்மாழ்வாரின் பங்கு முக்கியமானது. அவரது இயற்கை வேளாண்மையின் அடிப்படையில் ஒரு ஆன்மிக பார்வை இருந்தது. மதங்களை கடந்து மனிதர்களை இணைக்கும் இந்த மண்ணுக்கே உரிய ஆன்மிக பார்வை அது. அதையும் அவர் எப்போதும் முன்வைத்து வந்தார். எளிமையான மனிதர். பழகுவதற்கு இனியவர். மண்ணின் வாசம் தெரிந்தவர். இறுதி காலம் வரை போராளியாகவும் புத்தாக்க சக்தியாகவும் திகழ்ந்தவர். ஒரு புதிய திறப்பினை நமக்கு கொண்டு வந்தவர். இனி என்றென்றும் அவர் தமிழ் பண்பாட்டின் ஒரு அழியாத சின்னமாக வழிகாட்டும் குருவாக திகழ்ந்து கொண்டிருப்பார். அவரது நினைவுக்கு அஞ்சலியையும் அவரது பணி தொடரவும் விரிவடையவும் தன் பங்கையும் தமிழ்ஹிந்து தெரிவித்து கொள்கிறது.
தாய் மண்ணின் இயற்கை வளம் காத்திட வாழ்ந்த மூத்த மைந்தனுக்கு வணக்கம்.
இயற்கை வேளாண்மை என்பதன் அடிப்படை இயற்கையுடன் இணைந்த உணவு உற்பத்தி. மானுடத்தின் வரலாற்றில் வேளாண்மையின் உதயம் முக்கியமானது. அது ஒருவிதத்தில் ஒரு பிரிவையும் மற்றொரு விதத்தில் ஒரு இணைதலையும் முன்வைத்தது. அது வரை வேட்டையாடியும் கனி-கிழங்குகளை சேகரித்தும் வாழ்ந்த மனிதன் அதை விடுத்து திட்டமிட்டு உணவை உற்பத்தி செய்ய ஆரம்பித்தான். அவ்விதத்தில் அது வரை அவன் வாழ்ந்த இயற்கையிலிருந்து அவன் பிரிந்தான். 0108musings1மற்றொரு விதத்தில் தான் வாழும் மண்ணுடன் ஒரு ஆழமான உறவை ஏற்படுத்தினான். அதை உன்னிப்பாக கவனித்தான். விவசாய பண்பாடு வளர்ச்சி பெறும் காலத்தை ஒட்டியே ஆண் பெண் உறவுகளில் பாலின அடிப்படையிலான தொழில் பாகுபாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். பெண் உணவு உற்பத்தியில் ஒரு மைய இடத்தை பெற்றாள். நிலம் பெண்ணாக பார்க்கப்பட்டது. தொல் கற்காலம் முதல் மானுட ஆழத்தில் பெண் தெய்வமாக உரு பெற்றிருந்த போதிலும் இப்போது அந்த ஆழ்மன படிமம் (archetype) ஒரு இயக்கத்தன்மையை அடைந்தது. நிலத்தை பெண்ணாக நோக்கும் பார்வையின் அந்த ஆழமான வேர்களில் இருந்து பல சடங்குகள் உருவாகின. இவை தன்னியல்பில் வேற்றுமையை பேணும் தன்மை கொண்டவை. அதுவரை சடங்குகளுக்காகவும் புலப்பெயர்வுகளில் திசைகள் அறியவும் முக்கியமாக இருந்தவை விண்மீன் சுழற்சிகள். ஆனால் வேளாண்மை உருவான பிறகு வானிலை சுழற்சிகள், பருவநிலை மாற்றங்கள் ஆகியவை உன்னிப்பாக கவனிக்கப்பட்டன. உணவு உற்பத்தியுடன் உணவுப்பன்மை என்பது உணவு பாதுகாப்புக்கு முக்கியமானது.
krishna_balaramaஇக்காலகட்டத்தில் உருவான ஆபிரகாமிய அடிப்படை தொன்மங்களில் ஒரு பிளவை காணலாம். விவசாயத்திற்கும் கால்நடை மேய்ப்போருக்குமான அடிப்படை பிளவு அது. இறைவன் இதில் கால்நடை மேய்ப்போரையே ஆதரித்தான் என்கிறது விவிலியம். அத்துடன் உணவை வியர்வை சிந்த உற்பத்தி செய்வதே ஒரு சாபம் என்கிறது ஆபிரகாமிய ஆதி புனைவுகள். பாரதத்தின் தொன்மங்களில் இந்த இரு முக்கிய தொழில்களுக்கும் ஒரு இணைப்பும், உணவு உற்பத்தி ஒரு கர்மயோகமாகவும் காட்டப்படுவதை காண்கிறோம். பலராமனும் கிருஷ்ணனும் இணைந்த
பால்நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல உருவின் நேமியோனும் என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு
எனும் சித்திரத்தையே நம் மரபு நமக்கு அளித்தது. அன்னத்தை அதிக அளவில் உற்பத்தி செய்வதையும் பகுந்தளிப்பதையும் வேதம் சாபமாக அல்ல விரதமாக மனித சமுதாயத்துக்கு அளித்தது. puriஅதன் நீட்சியாக மானுடத்தின் வணக்கத்தை வானில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத தேவனுக்காக அல்லாமல் பருவநிலைக்கும் மழை வளத்துக்கும் காரணமாக விளங்கும் பர்வதத்துக்கு கொடுக்க சொன்னான் கண்ணன். உயிர்களின் பன்மை மானுட உயிர்வாழ்தலுக்கு அவசியம் என்பதை பாரத பண்பாடு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. விவசாயிகளின் உயிர்வாழ்தலுக்கு அவசியமான விதை நெல்களின் பன்மைக்கான ஒரு குறியீடாக பலராமனையும் கிருஷ்ணனையும் இணைத்து வணங்கும் பூரி ஜகன்னாத க்ஷேத்திரம் விளங்கியது அதிசயமில்லை. உணவு உற்பத்தியையும் உணவு பகிர்ந்தளித்தலையும் பெரும் அறங்களாக பாரத பண்பாடு உருவாக்கியது. அதே நேரத்தில் அந்த பகிர்ந்தளிப்பதென்பதில் மானுடத்தை மட்டுமல்லாது அனைத்து உயிர்களையும் பாரதம் இணைத்தது. இயற்கை விவசாய மீட்டெடுப்பும் முன்னகர்தலும் இந்த பண்பாட்டு மீட்டெடுப்பில் ஒரு முக்கிய மைய அம்சமாகும். சாதி மத மொழி எல்லைகளுக்கு அப்பால் இந்த மண்ணையும் பண்பாட்டையும் அடிப்படையாக கொண்ட ஒரு ஆன்மிக மக்கள் இயக்கமாக இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்த நம்மாழ்வார் வாழ்க்கையே ஒரு தவமாக வாழ்ந்த ரிஷி.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ‘கண்திறந்தது’ படத்திற்காக 1959ல் எழுதிய கீழ்க்கண்ட வரிகளோடு முடிக்கலாமென நினைக்கிறேன்.
எழுதிப் படிக்க அறியாதவன்தான்
உழுது ஒழச்சு சோறு போடுறான்…
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்லா நாட்டைக் கூறு போடுகிறான் –
இவன் சோறு போடுறான் –
அவன் கூறு போடுறா
Comments
Post a Comment