செலவில்லாமல் அதிக லாபம்

டீசல் சிக்கனமும் பம்ப்செட் தேர்வும்

சந்தையில் கிடைக்கும் பல்வேறு பம்ப்செட்களுக்கு தண்ணீரை பம்ப் செய்வதற்கு வெவ்வேறு அளவுகளில் டீசல் தேவைப்படுகிறது. எனவே, ஐ.எஸ்.ஐ., முத்திரை மற்றும் நட்சத்திரம் லேபிள் செய்த பம்ப்பை தேர்வு செய்வது முக்கியம். அது மட்டும் போதாது. விவசாயிகள் தங்களின் கிணற்றுக்கும், தண்ணீர் தேவைக்கும் ஏற்ப பம்ப்பை தேர்வு செய்ய வேண்டும். பக்கத்து தோட்டத்தில் பயன்படுத்தும் பம்ப் நல்லதாக இருந்தால், அது தங்களுக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.



ஐ.எஸ்.ஐ., முத்திரை

பம்ப்பை சரியான வேகத்தில் இயங்கச் செய்வதற்கு சரியான இன்ஜினையும் தேர்வு செய்ய வேண்டும்.

இதற்கு ஒரு நிபுணரிடம் கலந்து ஆலோசனை
செய்தல் நலன் பயக்கும். பம்ப்பை இயக்குவதற்கு போதிய குதிரை சக்தி (எச்.பி.) திறன் உள்ள இன்ஜினை தேர்வு செய்ய வேண்டும்.

இன்ஜினுக்குத் தேவைப்படும் சக்தியின் அளவை ஒரு நிபுணர் கணக்கிட முடியும். எப்போதுமே, பிரபலமாகவும் நல்ல தரமானதாகவும் உள்ள இன்ஜினை தேர்வு செய்வது நல்லதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

இன்ஜினில் ஐ.எஸ்.ஐ., முத்திரை இருக்கிறதா என பார்க்க வேண்டும்.


திறன் மிக்க இன்ஜின்
இன்ஜினில் மிக அதிக புகை வரக்கூடாது. தயாரிப்பாளர் பரிந்துரை செய்த சரியான கிரேடு மசகு எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.

இன்ஜினை ஆயில் பில்ட்டருடன் சேர்த்து பொருத்த வேண்டும். இன்ஜினில் காற்று பில்ட்டர் இருக்க வேண்டும். அதை அவ்வப்போது சுத்தம் செய்திட வேண்டும்.

சரியான புட்-வால்வு பயன்படுத்துவதன் மூலம் 10 சதவிகிதம் டீசல் மிச்சம்.

விரைப்பான பி.வி.சி., கொண்டு தயாரிக்கப்பட்ட பைப்கள், ‘கால்வனைஸ்’ செய்த இரும்பு பைப்களுடன் ஒப்பிடும்போது குறைவான உராய்வை ஏற்படுத்துகின்றன.

இதனால் எரிபொருள் சேமிப்புக்கு உதவும். ஒவ்வொரு பைப்லைன் வளைவும் 80 மி.மீ., விட்டம் கொண்டதாக இருக்க வேண்டும்.

டீசல் சிக்கன முறை

பைப்லைன் நீளம் 3 மீட்டர் கூடுதலாக இருப்பதற்கு ஏற்ப உராய்வு இழப்பை பைப்லைன் ஏற்படுத்துகிறது. பைப்பில் ஷார்ப் வளைவுகள் மற்றும் ‘எல்’ வடிவ இணைப்புகள் இருந்தால், சாதாரண வளைவுகளை காட்டிலும் 70 சதவிகிதம் அதிக உராய்வு இழப்பை ஏற்படுத்தும்.

நீர் மட்டத்தில் இருந்து 10 அடிக்கும் மிகாத உயரத்தில் பம்ப் அதிக செயல்திறனுடன் இயங்கும். கிணறு ஆழமாக இருந்தால், சரியான உயரத்தில் மேடை அமைத்து பம்ப்பை பொருத்த வேண்டும்.

பைப் உயரத்தை 2 மீட்டர் குறைப்பதன் மூலம் விவசாயி ஒவ்வொரு மாதமும் 15 லிட்டர் டீசலை சேமிக்கலாம் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட் நெல்!
Posted on September 5, 2017 by gttaagri
இரசாயனத்திலிருந்து திடீரென்று இயற்கை விவசாயத்திற்கு மாறினால் மகசூல் குறையலாம். ஆனால், போகப்போக இயற்கை விவசாயத்தில் செலவே இல்லாமல் இரசாயனத்திற்கு ஈடாக கண்டிப்பாக மகசூல் கிடைக்கும். இதற்கு தானே உதாரணம் என்று ஜீரோ பட்ஜெட் விவசாய முறை பற்றி கூறுகிறார், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன்.

சுற்றுச்சூழல் பாதிப்பு கருதி குதிரை வண்டியில்தான் பயணம் செய்கிறார். சின்னியம்பாளைத்தில் உள்ளது லோகநாதன் அவர்களின் பண்ணை.
விட்டுவிட்டு பெய்யும் தூறல் மழை, வானம் வெளி வாங்கக் காத்திருக்கும் மேய்ச்சல் ஆடுகள், தொழுவத்தில் தலை சிலிர்க்கும் நாட்டு மாடுகள், வெதுவெதுப்பைத் தேடி அலையும் கோழிக்குஞ்சுகள், அசைபோடும் குதிரைகள் என ஒருங்கிணைந்து கிடக்கிறது, இவருடைய பண்ணை.
வாகனப் புகையால் ஏற்படுகின்ற சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க குதிரை வண்டி சவாரி மேற்கொள்கிறார் லோகநாதன். சவாரிக்கு மட்டுமல்லாமல் பல்வேறு பயன்பாட்டிற்காக மூன்று குதிரைகளை வளர்த்து வருகிறார்.

காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்தில் ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. நெல் விவசாயம் தான் பிரதானம். முழுக்க முழுக்க ஜீரோ பட்ஜெட் முறையில் பாரம்பரிய ரகங்களைப் பயிர் செய்கிறார். ஒரு காலத்தில் முப்போகம் நெல் விளைந்த பூமி. பல வருடமாக பருவமழை பெய்யாமல் போனது. கிடைத்த பாசன நீரை வைத்து ஒரு போக வெள்ளாமை நடந்ததாக லோகநாதன் கூறினார். அதனால் ஐந்து ஏக்கரில் மொத்தமாக சாகுபடி செய்யாமல், மூன்று ஏக்கரில் மரப்பயிர்களை நட்டிருக்கிறார். 2007-ம் வருட கடைசியில், ஈரோட்டில் பசுமை விகடன் ஜீரோ பட்ஜெட் பயிற்சியில் கலந்து கொண்டார். பிறகு நான்கு நாட்டு மாடுகள் வாங்கிவந்து பாலேக்கர் சொல்லிக் கொடுத்த மாதிரிதான் பண்ணையம் செய்வதாக கூறுகிறார்.

நாட்டு ரக நெல் வகைகள்
மாப்பிள்ளை சம்பா, கிச்சிலி சம்பா, பூங்கார் என்று போன போகங்களில் மாற்றி மாற்றி நடவு செய்திருக்கிறார். அதை இருப்பு வைத்து விதை நெல்லாகவும், அரிசியாகவும் கேட்கிறவர்களுக்கு கொடுத்துக்கொண்டு இருக்கிறார். இந்த போகத்தில் சொர்ணமசூரி இரக நெல்லை நடவு செய்திருக்கிறார். இதனுடைய மொத்த வயது 120 நாட்கள். இப்போது 70 நாள் பருவம். பூட்டை எடுத்திருக்கிறது. தை மாதம் அறுவடை செய்யலாம்.

பிழையில்லா விளைச்சலுக்கு பீஜாமிர்தம்
அடுத்த போக வெள்ளாமைக்குத் தேவையான விதைநெல்லை நேர்த்தி செய்து சேமித்து வைத்திருக்கிறார். அதற்கு பீஜாமிர்த கரைசலைத்தான் பயன்படுத்துகிறார். வளரும் நாற்றுகளில் வேர் சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்த இந்த பீஜாமிர்தம் உதவியாக இருக்கிறது. நெல்லை நாற்றங்காலில் விதைத்து 15-ம் நாளில் ஒரு கைக்களை எடுத்து, 10 லிட்டர் அமுதக்கரைசலை பாசன நீரில் கலந்துவிட்டால் போதும். முப்பது நாட்களில் இருந்து நாற்பது நாட்களுக்குள் நாற்று தயாராகிவிடும். ஒரு போகம் முடிந்ததும், வயலில் ஆட்டுக்கிடை, மாட்டுப்பட்டி போடுவார்கள். அதனால் ஆட்டுப் புழுக்கை, மாட்டுச் சாணம் இரண்டும் மண்ணில் மண்டிக் கிடக்கும். இது நல்ல அடியுரமாக இருக்கிறது.

அறுவடைக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துவது கிடையாது. கருக்கறுவாள் மூலமாக அறுவடை செய்து, களத்து மேட்டில் கதிரடிக்கிறார்கள். இவருக்கு ஏக்கருக்கு சராசரியாக 1, 700 கிலோ நெல் கிடைக்கிறது. இதை நேர்த்தி செய்து 700 கிலோவை விதைநெல்லாக, கிலோ 50 ரூபாய் என்று விற்பனை செய்கிறார். இதன் மூலமாக 35 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆயிரம் கிலோ நெல்லை அரிசியாக அரைக்கும்போது 600 கிலோ அரிசியும், 400 கிலோ தவிடும் கிடைக்கும். ஒரு கிலோ அரிசி 70 ரூபாய் என்று 42 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். தவிடை மாடுகளுக்குத் தீவனமாக வைக்கிறார். முழுக்க முழுக்க ஜீரோ பட்ஜெட் முறையில் செய்வதால் ஏக்கருக்கு அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய்தான் செலவாகும். இந்தக் கணக்கில் ஏக்கருக்கு 65 ஆயிரம் ரூபாய் லாபம். மாட்டுக்கான தவிடும், வைக்கோலும் போனஸ் என்று கூறுகிறார் லோகநாதன்.

ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு
இவரிடம் நாட்டு பசுக்கள் – 5, வெள்ளாடு மற்றும் குட்டிகள் – 20, செம்மறி ஆடுகள், கோழி மற்றும் குஞ்சுகள் – 20, வாத்துகள் – 12, குதிரைகள் -4, இதெல்லாம் இருக்கிறது. மாடுகளின் சாணம், கோமியத்தை வைத்து ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், பீஜாமிர்தம் மாதிரியான ஜீரோ பட்ஜெட் இடுபொருட்களை பைசா செலவில்லாமல் தயாரிக்கின்றனர். இதுபோக வீட்டுக்குத் தேவையான பசும்பால் கிடைக்கிறது. இந்த நாட்டு மாடுகள் மூலமாக வருடத்திற்கு 3 கன்றுகள் வரைக்கும் எடுத்து விற்பனை செய்கிறார். இதன் மூலமாக 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. வருடத்திற்கு 15 ஆட்டுக் குட்டிகள் விற்கிறார். இதன் மூலமாக குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. ஆடுகளின் புழுக்கை, மூத்திரத்தை எடுத்து சர்க்கரைப் பாகு கலந்து ஆட்டூட்டம் தயாரித்து எள், தட்டைப் பயறு மாதிரியான வரப்புப் பயிர்களுக்கு கொடுக்கிறார். செம்மறி ஆடுகள், வயலில் இருக்கும் களைகளை கட்டுப்படுத்துகின்றன. அவைகளின் புழுக்கையும் மண்ணுக்கு உரமாகி, உடனடியாக பலன் கொடுக்கிறது. வருடத்திற்கு ஐந்து செம்மறியாட்டுக் குட்டிகளை விற்பனை செய்வதன் மூலமாக 15 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. கோழிகள் மூலமாக கிடைக்கும் முட்டைகளைப் பொரிக்க வைக்கிறார். இதில் கிடைக்கும் சேவல் குஞ்சுகளை மட்டும் தனியாக வளர்த்து பெரிய சேவலாக விற்பனை செய்கிறார். இதன் மூலமாக வருடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. வாத்துகள் வயலில் மேய்ந்து புழு பூச்சிகளைத் தின்று காலி செய்கின்றன. அதனுடைய எச்சம் பயிர்களுக்கு உரமாகிறது. வாத்து முட்டைகள் விற்பனை மூலம் ஒரு சிறிய வருமானமும் கிடைக்கிறது.

5 அடி இடைவெளியில், மூன்று ஏக்கரில் 8 ஆயிரம் சவுக்கு மரங்களை நட்டு மூன்று மாதம் ஆகிறது. நான்கு வயதில் 200 ஈட்டி மரங்களும் இவரது பண்ணையில் இருக்கிறது. வயல் முழுக்க வரப்பில் தட்டைப்பயறு விதைத்து இருக்கிறார். அதனால் வரப்புகளில் களைகள் கட்டுப்படுவதோடு, வயலில் இருக்கும் மற்ற பயிர்களை நோக்கி வரும் புழு, பூச்சிகளை ஈர்த்து, பயிர்களையும் பாதுகாக்கிறது இந்த தட்டைப் பயறு. கூடவே இதன் மூலமாகவும் ஒரு வருமானம் கிடைக்கிறது.

ஜீரோ பட்ஜெட், நெல் சாகுடி
லோகநாதன், ஜீரோ பட்ஜெட் முறையில் சொர்ணமசூரி ரக நெல் சாகுடி செய்யும் முறை பின்வருமாறு
நன்கு உழுது தயார் செய்த வயலில் நாற்றுக்கு நாற்று 25 சென்டிமீட்டர் இடைவெளி இருக்கும்படி, ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 20 மற்றும் 40-ம் நாட்களில் கைகளால் களை எடுத்து, 100 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். இது, மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை பல மடங்கு பெருக்குவதுடன், ஆழத்திலிருக்கும் மண்புழுக்களை மேலே வரச்செய்து பயிர்களுக்குத் தேவையான நுண்ணூட்டங்களைக் கொடுக்கச் செய்கிறது. அவ்வப்போது பயிரின் வளர்ச்சியைப் பொறுத்து ஜீவாமிர்தத்தை பாசன நீரில் கலந்து வர வேண்டும்.

அமோக விளைச்சலுக்கு அக்னி அஸ்திரம்
பயிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில் குருத்துப்புழு, இலைச்சுருட்டுப் புழு, கதிர்நாவாய்ப்பூச்சி, வெள்ளை ஈக்கள் வர வாய்ப்புகள் உண்டு. 100 லிட்டர் அக்னி அஸ்திரம், 3 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரைக் கலந்து, அதிகாலை வேளையில் புகைபோல் தெளித்தால் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் அனைத்தும் போய்விடும். மற்ற ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் போல் வாரம் ஒரு முறை தெளிக்க வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. ஜீரோ பட்ஜெட் விவசாயத்தைப் பொறுத்தமட்டில், நோய்த் தாக்குதல் தென்பட்டால் மட்டும், அக்னி அஸ்திரத்தைப் பயன்படுத்தினால் போதுமானது. அசுவிணி, செம்பேன் மற்றும் பூஞ்சாணத் தொற்று தென்பட்டால், மாதம் இரண்டு முறை பிரம்மாஸ்திரம் தெளிக்க வேண்டும். தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமான நீர்ப்பாசனம் கொடுத்து வந்தால், 120-ம் நாளில் அறுவடை செய்யலாம்.

செலவில்லாத குடற்புழு நீக்கம்
கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய, தான் பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றி லோகநாதன் கூறினார். ஆடு, மாடுகளுக்கு வருடத்திற்கு இரண்டு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். இதற்காக மருந்திற்கு எங்கேயும் அலைய வேண்டியதில்லை. தெளிந்த கண்ணாடி மாதிரி இருக்கும் சுண்ணாம்புத் தண்ணீரைக் கொடுத்தாலே போதும். தன்னால் குடலில் இருக்கும் புழு, பூச்சி வெளியே வந்துவிடும். மாட்டிற்கு 500 மில்லி, ஆட்டிற்கு 200 மில்லி, ஆட்டுக்குட்டிக்கு 100 மில்லி, குதிரைக்கு 500 மில்லி என்ற அளவில் கொடுக்க வேண்டும். 50 வருடமாக இதைத்தான் இவர் கொடுத்துவருவதாக கூறுகிறார்.


முதலீடு தேவையில்லை மூலிகை தரும் வருமானம்

காடுகளில் கிடைக்கும் மூலிகைச் செடிகள் மருந்துக்காக ஏற்றுமதி செய்யப்படும் அதேநேரம், அவற்றுடன் கிடைக்கும் களைச் செடிகளும் காசாகின்றன.

விருதுநகர் மாவட்டம் துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. விவசாயத்தில் பட்டப் படிப்பு முடித்த இவர், மூலிகைச் செடிகளை விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் ஒன்றில் 2 ஆண்டுகளுக்குப் பணிபுரிந்தார். பின்னர் அந்த வேலையைவிட்டு விலகித் தென்காசியில் சொந்தமாகத் தொழில் செய்ய ஆரம்பித்தார். பிறகு தன்னுடைய சொந்த மாவட்டமான விருதுநகரில் உள்ள அழகாபுரியில் மூலிகைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் தொழிலைத் தொடங்கினார்.


கூடுதல் வருமானம்

விவசாயம் மற்றும் கூலி வேலைகளை மட்டுமே நம்பி இருந்த மக்களுக்கு இந்தத் தொழில், வருமானம் ஈட்டக்கூடிய இன்னொரு வாய்ப்பாக அமைந்தது. சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் காலையில் வேறு வேலைக்குச் சென்றுவிட்டு, மாலையில் மூலிகைச் செடிகளை இவருடைய நிறுவனத்துக்காகத் தேட ஆரம்பித்தனர். வேலை இல்லாத நாட்களில் சுற்றியுள்ள கிராமங்களின் தரிசு நிலங்களில் கிடைக்கும் மூலிகைச் செடிகளைச் சேகரிக்க ஆரம்பித்தனர். நெருஞ்சி, செந்தட்டி, ஆடாதோடா எனக் காடுகளில் கிடைக்கும் பல்வேறு மூலிகைச் செடிகளை இவருடைய நிறுவனத்திடம் கொடுத்துக் காசாக்கிச் செல்கின்றனர்.

அதேபோலத் துளசி, கீழாநெல்லி, செம்பருத்தி, மருதாணி, ஆவாரம்பூ, தூதுவளை, நித்திய கல்யாணி, அவுரி உள்ளிட்ட 150 வகை மூலிகைகள் பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. விருதுநகர் மட்டுமின்றி மதுரை, திருச்சி, நாமக்கல் எனப் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மூலிகைச் செடிகள் வரவழைக்கப்படுகின்றன. இந்த முயற்சி குறித்துக் கருப்பையா பகிர்ந்துகொண்டார்.

மதிப்பு கூட்டும் முயற்சி

“எந்தப் பொருளும் வீண் போகாது. காடுகளில் தானாக வளர்ந்து கிடக்கும் செந்தட்டி, நெருஞ்சி, ஆடாதோடா எனப் பல செடிகள் மூலிகைச் செடிகள்தான். ஒவ்வொரு காலத்துக்கு ஏற்ப, பல்வேறு மூலிகை செடிகள் கிடைக்கின்றன. இந்தச் செடிகளிலிருந்து எண்ணெய், சூரணம் உள்ளிட்ட மூலிகைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

Comments

Popular posts from this blog

மாடி தோட்டம்

நம்மாழ்வார் அய்யாவின் வாழ்கை வரலாறு